27 கணவனின் கடமை
மெல்ல மகிழனின் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் கீர்த்தி. அதைக் கண்டு கோபமடைந்த மகிழன், கட்டிலை விட்டு கீழே இறங்கி, அவளை நோக்கி விரைந்து சென்றான்,
"எதுக்காக நீ என் ரூமுக்குள்ள வந்த?" என்று சீறியபடி.
"கோபப்படாதீங்க... நமக்கு வாழ்க்கை இருக்கு" என்றாள் அவனை சமாதானப்படுத்தும் நோக்கில்.
"வாழ்க்கையா? எந்த வாழ்க்கையைப் பத்தி பேசுற? என் வாழ்க்கையை நாசம் பண்ணவளே நீ தான். அதை பத்தி பேசுற அருகதை உனக்கு கிடையாது"
"நான் என்ன செய்ய முடியும்? அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? உங்களை நான் சாராய பாட்டிலோட பார்த்தேனே..."
"நான் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு நீ சொன்ன... நான் அப்படி நடந்துகிட்டேனா? நான் உன்னை தொட கூட இல்ல..."
கீர்த்தி ஏதோ சொல்ல முயல,
"உன்னோட நடத்தைக்கு நியாயம் கற்பிக்க முயற்சி பண்ணாத. நீ என்ன செஞ்சன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னை வலுக்கட்டாயமா உன் மேலே இழுத்துக்கிட்டு, கட்டில்ல விழுந்த. மரியாதையா இங்கிருந்து போய்டு"
"நான் எங்கே போவேன்?"
"உங்க அப்பன் ஆத்தாகிட்ட போ. அவங்க தானே உன்னோட நாடகத்துக்கு முக்கிய கதாபாத்திரம்..."
"என்னது...? நாடகமா?"
"எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ மலரவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தது எனக்கு தெரியாதா? அவனுக்கு கல்யாணம் நிச்சயமா ஆனதுக்கு பிறகு, என் மூலமா, என்னோட மனைவியா இந்த வீட்டுக்கு வந்து, அவனை அடையலாம்னு பாக்குற. அதுக்காகத் தான் என் குடும்பத்துக்குள் நீ வந்திருக்க"
கீர்த்தி திகிலுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். இந்த அளவிற்கு மதி யூகம் நிறைந்தவனா மகிழன்? மகிழன் அவளது உண்மை எண்ணத்தை புரிந்து கொண்டு, அதை கூறவில்லை தான். அவன் அதை கோபத்தில் தான் கூறினான். ஆனால் துரதிஷ்டவசமாய், அவன் கூறியது உண்மை.
"இல்ல, நீங்க நினைக்கிறது உண்மை இல்ல" என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.
"உன்னை நம்புறதுக்கு எனக்கு ஒரே ஒரு காரணம் கூட கிடையாது. மரியாதையா வெளியில போ"
"நான் சொல்றதை கேளுங்க மகிழன். என்கிட்ட குவியல் குவியலா பணம் இருந்து என்ன பிரயோஜனம்? எனக்கு உங்க அன்பும் ஆதரவும் தான் தேவை" என்றாள் தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டி.
"அன்பும் ஆதரவுமா? எதுக்கு? என் குடும்பத்தை அடியோட அழிக்கவா? நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அது நிச்சயம் நடக்காது"
"கோடி கோடியா பணத்தை கொண்டு வந்து உங்ககிட்ட கொட்டினா, அப்போ நீங்க என்னை நம்புவீங்களா?"
"கோடி கோடியா பணமா?" என்று விழிகளை சுருக்கினான் மகிழன்.
நம்பிக்கையுடன் ஆம் என்ற தலைகசைத்தாள் கீர்த்தி.
"என்னை உயிரோடு கொன்னுட்டு, இப்போ பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க பார்க்கிறியா?"
"இல்ல..."
அவளது கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு வந்த அவன், தன் அறையில் இருந்து அவளை வெளியே தள்ளி, கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டான்.
கொதிப்புடன் நின்றாள் கீர்த்தி. அவள் எதிர்பார்த்தது வேறு. ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பதோ அவள் எதிர்பார்த்தற்க்கு முற்றிலும் மாறானது. பணத்தைக் காட்டி மகிழனை தனது அடிமையாக்கி விட முடியும் என்ற அவளது திட்டம் மண்ணைக் கவ்வியது. இப்பொழுது அவள் என்னை என்ன செய்யப் போகிறாள்?
மறுநாள் காலை
தன் கைபேசி மணியின் ஓசை கேட்டு மலரவனின் தூக்கம் கலைந்தது. தன் கைபேசியை எடுக்க அவன் தன் கையை நீட்ட, மெத்தென்ற ஏதோ ஒன்று அவன் கையில் தட்டுப்பட்டது. அது நிச்சயம் தலையணை இல்லை. கண்களை திறந்த அவன், பூங்குழலி தன்னருகில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளை விட்டு தூக்கம் பறந்தோடிச் சென்றது. லேசாய் தன் உடலை முறுக்கினாள் பூங்குழலி. அவனது தொடுதல் அவளது தூக்கத்தை கலைத்திருக்க வேண்டும். கண் விழித்த பூங்குழலி அவனைப் பார்த்து புன்னகை சிந்தினாள்.
"குட் மார்னிங்" என்று சாதாரணமாய் கூறிவிட்டு, மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டாள், மலரவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி.
திடுக்கிட்டு கண்களை திறந்தவள், சட்டென்று எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். சிரித்தபடி எழுந்து அமர்ந்த மலரவன்,
"வழக்கம் போல நான் இருக்கிறதை கற்பனைனு நினைச்சுக்கிட்டியா?" என்றான் கிண்டலாய்.
"இல்ல..."
"பொய் சொல்லாத... பொய்யை கண்டுபிடிக்கிற திறமை எனக்கு இருக்கு"
"ரொம்ப நல்லது" என்று கட்டிலை விட்டு கீழே இறங்கிய அவள், குளியலறையை நோக்கி விரைந்தாள்.
சிரித்தபடி தன் கைபேசியை எடுத்த அவன், அதில் வந்திருந்த அழைப்பை பார்த்தான். அந்த அழைப்பு மித்திரனிடமிருந்து வந்திருந்தது. எதற்காக மித்திரன் அவனுக்கு இவ்வளவு காலையில் ஃபோன் செய்தான்? அவன் மித்திரனுக்கு ஃபோன் செய்ய, அந்த அழைப்பை ஏற்றான் மித்திரன்.
"சொல்லு மித்திரா"
"நீ சந்தேகப்பட்டது சரியா போச்சு"
"நீ என்ன சொல்ற?"
"குமரேசன் ராகேஷுக்கு லஞ்சம் கொடுத்திருக்காரு"
"என்னது????"
"ஆமாம். நேத்து ராத்திரி இருபத்தி அஞ்சு லட்சம் கை மாறிஇருக்கு"
"உனக்கு எப்படி தெரியும்?"
"என்னோட ஆளுங்களை, குமரேசனையும் ராகேஷையும் ஃபாலோ பண்ண சொன்னேன்"
"கீர்த்தியையும் ஃபாலோ பண்ணு"
"சரி ஏற்பாடு பண்றேன். இந்த உண்மையை நீ மகிழன் கிட்ட சொல்லு"
"இல்ல, இப்போ வேண்டாம்"
"ஏன் மலரா?"
"அவன் ஏற்கனவே அந்த பொண்ணு மேல எக்கச்சக்க கோவத்துல இருக்கான். நேத்து ராத்திரி ஃபுல்லா அவளை ரூம்குள்ளயே விடாம வெளியிலேயே நிறுத்தி வச்சிருந்தான்"
"அப்படியா நடந்தது?"
"ஆமாம். அவனுக்கு மட்டும் உண்மையை தெரிஞ்சா, அந்த பொண்ணை அவன் கொன்னுடுவான்"
"சாகட்டும் விடு"
"அந்த பொண்ணு சாகுறதை பறத்தி நான் கவலைப்படல. மகிழனோட வாழ்க்கையை பத்தி தான் கவலைப்படுறேன். அவங்க எதுக்காக இப்படி செஞ்சாங்கன்னு தெரிஞ்சுதா?"
"இல்ல. அவங்க காரணத்தை பத்தி எதுவும் பேசிக்கல. மகிழனை பத்தி பொய் சொன்னதுக்காக, குமரேசன் ராகேஷுக்கு நன்றி சொன்னாரு. ராகேஷ் தான் மகிழனை கட்டாயப்படுத்தி குடிக்க வச்சிருக்கான். திட்டம் போட்டு அவனுங்க மகிழனை மடக்கிட்டானுங்க"
"நான் சொல்றபடி செய்"
"சரி"
என்ன செய்ய வேண்டும் என்று அவனிடம் கூறினான் மலரவன். அதற்கு மித்திரன் ஒப்புக்கொண்டான்.
"அவன் ஜெயிலுக்கு போகணும்"
"நிச்சயம் போவான்"
"அதுக்கப்புறம் அவங்க ஏன் இதை செஞ்சாங்கன்னு நமக்கு தெரிய வரும்"
" ஆமாம்"
கோபத்துடன் அழைப்பை துண்டித்தான் மலரவன். அவர்களுக்கு என்ன வேண்டுமென்று அவனுக்கு புரியவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாய் அவனது அப்பாவின் கண்களில் மகிழனை ஒரு குடிகாரன் போல் சித்தரித்து விட்டார்கள்...! அவர்களது திட்டம் தான் என்ன? கீர்த்தி எதற்காக இந்த குடும்பத்தின் மருமகளானாள்? அவர்களை பழிவாங்க நினைக்கிறாளோ? அவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவள் என்ன செய்கிறாள் பார்க்கலாம்.
.........
பூங்குழலி சமையல் அறைக்கு செல்வதை பார்த்தான் மகிழன். ஓடி சென்று அவள் முன்னாள் நின்றான். பூங்குழலி திடுக்கிட்டு பின் வாங்கினாள்.
"ஒரு நிமிஷம் பூங்குழலி... ஐ மீன், அண்ணி..."
அவன் தன்னை அண்ணி என்று அழைத்ததை கேட்டு வியந்தாள் பூங்குழலி.
"ஐ அம் சாரி"
"எதுக்கு சாரி சொல்றீங்க?"
"உங்களை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்" என்றான் வருத்தத்துடன்.
"நீங்க எப்போ என்னை காயப்படுத்தினீங்க?" என்றாள் அமைதியாக
"நான் செய்தேன்..."
"அதுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னதால தான் நான் மலரவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இல்லன்னா அவரை மாதிரி ஒரு அற்புதமான மனுஷனை நான் இழந்து இருப்பேன்"
மகிழனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.
"ஆமாம். மலரவன் நல்லவன். ஆனா யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டான்" என்றான் சங்கட சிரிப்புடன்.
"அப்படியா சொல்றீங்க? ஒருவேளை மத்தவங்க கிட்ட அவர் அதிகம் பேசுறதில்லையோ என்னவோ..."
"உங்ககிட்ட அவன் அப்படி இல்லாம இருக்கிறது எனக்கு சந்தோஷம்"
புன்னகையற்ற முகத்துடன் லேசாய் தலையசைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள் பூங்குழலி, மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசிக் கொண்டிருக்காமல். அவனை கண்மூடித்தனமாய் நம்ப அவள் தயாராக இல்லை. யாருக்கு தெரியும், அவன் மனதில் என்ன இருக்கிறது என்று?
ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் நின்றான் மகிழன். பூங்குழலி இப்பொழுது அவனது அண்ணனின் மனைவி. அவளை காயப்படுத்தியதற்காக வருத்தப்படுவது கூட இப்பொழுது தவறாகிவிடும். அது கேட்க நன்றாக இராது.
யாரோ பின்னால் இருந்து லேசாய் இரும, திரும்பி பார்த்தான் மகிழன். சிரித்தபடி அவனை நோக்கி வந்தான் மலரவன். மகிழனுக்கு சங்கடமாய் போனது.
"நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத. அவளை நான் பார்த்துக்கிறேன்" என்றபடி சமையல் அறையை நோக்கி நடந்தான் மலரவன்.
தன்னிடம் பூங்குழலியை பற்றி அவன் சாதாரணமாய் பேசி விட்டு சென்றதை கண்ட மகிழன் பிரமித்து போனான்.
......
சமையலறைக்கு வந்த பூங்குழலி, மலரவனுக்கு காபி போடுவதற்காக பாலை அடுப்பில் வைத்து சூடேற்றினாள். தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்த அவள், திரும்பிப் பார்க்க, அங்கு கீர்த்தி நின்று கொண்டிருந்தாள். சம்பிரதாயமான புன்னகை சிந்தி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் பூங்குழலி.
"அப்படி உன்கிட்ட என்ன இருக்குன்னு எனக்கு புரியல" கீர்த்தி கூறியதைக் கேட்டு, பூங்குழலியின் கரம் வேலை செய்வதை நிறுத்தியது.
"முதல்ல தம்பி உன்னை கல்யாணம் பண்ணியே தீருவேன்னு சுத்திக்கிட்டு இருந்தான். அவன் முடியாதுன்னு சொன்னதுக்கு பிறகு, அவனோட அண்ணன், நான் பண்ணிக்கிறேன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு முன்வந்தான். ஆம்பளைங்கள வளைச்சு போடுற வித்தையை நீ எங்க கத்துக்கிட்ட? எனக்கு அது சுட்டு போட்டா கூட வர மாட்டேங்குது"
அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பூங்குழலி. எப்படி அவளால் இப்படியெல்லாம் பேச முடிகிறது? கீர்த்தியின் முகத்தில் நமுட்டு புன்னகை தவழ்ந்தது. அவள் நினைத்ததை தான் அவள் சாதித்து விட்டாளே. அவளது புன்னகை காணாமல் போனது, அவள் மீது மலரவன் பார்வையால் நெருப்பை உமிழ்ந்து கொண்டே நின்றதை பார்த்தபோது.
அவள் முக மாற்றத்தை கவனித்த பூங்குழலி அந்த திசை நோக்கி திரும்ப, அங்கு மலரவன் நின்றிருப்பதை பார்த்து அவளுக்கு மேலும் அவமானமாய் போனது. அதே நேரம் அவள் மனம் நிம்மதியும் அடைந்தது. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு சென்றான் மலரவன்.
நிம்மதி பெருமூச்சு விட்டாள் கீர்த்தி. பெண்கள் விஷயத்தில் தான் தலையிட வேண்டாம் என்று அவன் நினைத்திருக்கலாம் என்று எண்ணினாள் அவள்.
"ஐயோ பாவம்... நான் சொன்னது சரிதான்னு உன் புருஷன் கூட ஒத்துக்கிட்டார் போல இருக்கு" என்று எகத்தாளமாய் அவள் கூற, பூங்குழலிக்கு அது கோபத்தை உண்டு பண்ணியது.
அடுப்பை அணைத்துவிட்டு தங்கள் அறையை நோக்கி விரைந்தாள். இல்லை, இல்லை, தங்கள் அறைக்கு மலரவனுடன் சண்டையிட சென்றாள். தரையை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான் மலரவன்.
"இந்த லட்சணத்தில் தான் உங்க மனைவியோட மரியாதையை நீங்க காப்பாத்துவீங்களா?"
அவள் பக்கம் திரும்பாமல் அப்படியே நின்றான் மலரவன்.
"நான் உங்ககிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். நீங்க என்னோட புருஷன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" அவள் உரத்த குரல் எழுப்பினாள்.
முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அவளை நோக்கி திரும்பிய அவன்,
"அப்படின்னா, நான் வேற வேலை வெட்டி எதுவும் செய்யாம, கிச்சன்ல உன் கூட உட்கார்ந்துகிட்டு வர்ற பிரச்சினையில இருந்து உன்னை காப்பாத்தி கிட்டு இருக்கணுமா?" என்றான்.
"நீங்க என்ன சொல்றீங்க?"
"நான் கிச்சனுக்கு தற்செயலா தான் வந்தேன். அங்க, இந்த வீட்டோட இன்னொரு மருமக உன்னை தரகுறைவா பேசிக்கிட்டு இருந்தா... இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற?"
"நீங்க எதுவும் செய்ய மாட்டீங்களா? இது தான் உங்களுடைய பொறுப்பா?"
சில அடிகளை வேகமாய் எடுத்து வைத்து அவளை அடைந்த மலரவன், அவள் எதிர்பாராத வண்ணம் அவள் மேற்கரங்களைப் பற்றினான்.
"அதையே தான் நானும் கேட்கிறேன் பூங்குழலி... நீ எதுவும் செய்ய மாட்டியா? அடுத்தவங்க உன்னை அவமானப்படுத்துறதை கேட்டுகிட்டு நீ சும்மா தான் நிப்பியா? இந்த மாதிரியான அவமானங்களை நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ போறியா? இல்ல, என்னுடைய வேலையை விட்டுட்டு, கிச்சன்ல உன் கூட உட்கார்ந்துகிட்டு, உன்னை நான் பாதுகாக்கணும்னு நினைக்கிறியா?"
திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. அவள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறான் அவன்?
"அவ பேசின உடனேயே, அவ பல்லை நீ ஒடச்சிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். குறைந்தபட்சம் ஒரு அறையாவது விட்டு இருக்கலாம்...! ஆனா நீ...? கண் கலங்கி நிற்கிற...! இதை நான் உன்கிட்ட எதிர் பார்க்கல பூங்குழலி. என்னோட பொண்டாட்டி, ஒவ்வொரு தடவையும் தன்னை காப்பாத்த யாராவது வர மாட்டாங்களான்னு எதிர்பார்க்கிறவளா இருக்கக் கூடாது. நீ மிஸஸ் மலரவன்... உன்னோட மதிப்பு என்னன்னு நீ தெரிஞ்சுக்கோ. என்னோட வைஃப் வாரியரா இருக்கணும்... ஒரியரா இருக்கக் கூடாது" அவள் கரங்களை விட்டான்.
"ஆனா, நான் அப்படி செஞ்சா, அது நம்ம குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணும்..."
"இது தான் உன்னோட பிரச்சனை. தப்பு செய்றவ, எதை பத்தியும் கவலைப்படாம தைரியமா செய்றா...! ஆனா நீ உன்னோட மரியாதையை காப்பாத்திக்க தயங்குற. இது தான் அவளோட பலம். உன்னோட பலவீனம் தான் அவளோட பலம். உன்னோட பலவீனத்தை பலமா மாத்து. சுயமரியாதைன்னு வரும் போது, உன்னை எதுவும் தடுக்க முடியாதுன்னு அவளுக்கு காட்டு"
தீர்க்கமாய் தலையசைத்து விட்டு அந்த அறையை விட்டு சென்றாள் பூங்குழலி. கணவனுக்கு உரிய கடமையை செவனே நிறைவேற்றிய மலரவன், புன்னகையுடன் நின்றான்.
தொடரும்....