"டேய்.... உங்க ரெண்டு பேரோட காசு கணக்கு விஷயத்துல நான் உள்ள வரலன்னு அவ தான் உங்கிட்ட தெளிவா சொல்லியிருந்தாளே? அவ அப்டி சொன்னதுக்கு அப்புறமும் நீ
ஏன்டா எனக்கு குடுக்க வேண்டிய பணத்த அவ கிட்ட போய் குடுத்த? எங்கிட்டயே அத குடுத்துருக்க வேண்டியதுதான?" என்று கேட்டவனிடம்,
"உங்கிட்ட குடுக்கணுமா? குடுத்துட்டாப் போச்சு!" என்று சொல்லி விட்டு அவனுடைய பின் மண்டையில் மடாரென ஒரு அடி அடித்தான்.
"அட சைத்தானே..... என்னத்த கேட்டா என்னத்தடா குடுக்குற? இப்ப எதுக்கு என்னைய அடிச்ச?" என்று கோபக்குரலில் கேட்ட தன்னுடைய நண்பனிடம்,
"ஒனக்கு ஒரு மண்ணும் புரியல இல்ல..... அதுக்குத்தான்; இப்டியே கடைசி வரைக்கும் அம்மா, அப்பாட்ட பாசம் காட்டிட்டே பொண்டாட்டிய கவனிக்க மறந்துடு! அறிவுகெட்டவனே.... ஏன்டா பெரியவங்க இருக்குற வீட்ல அவங்க கையில தான் பணப்பொறுப்ப குடுக்கணும்; அது சரிதான்டா; ஆனா அப்பப்ப உன்னைய கட்டிக்கிட்டவளுக்கு ஏதாவது பணத்தேவை இருக்கான்னு கேட்டு அத கவனிக்குறதும் உம்பொறுப்பு தான் தெரியும்ல?"
"மரியம் அவளோட அம்மா அப்பாவுக்கு மாசா மாசம் ஏதோ கொஞ்சம் பணம் குடுக்கணும்னு நெனச்சா, ஏன்.... அனிஷாவ ட்யூஷனுக்கு கூட்டிட்டுப் போக நெனச்சா கூட அதெல்லாம் உங்கம்மா வீண் செலவுன்னு சொன்னாங்கன்னா என்னடா பண்றது? ஓடி ஓடி சம்பாதிக்குறது எதுக்கு? பொட்டிக்குள்ள வச்சு வச்சு பூட்டுறதுக்கா.... ஆனாலும் எத எத வீண்செலவுன்னு சொல்றதுன்னு ஒரு நியாயம் வேண்டாமாடா?" என்று கேட்டான்.
"எ.....து? ட்யூஷன் பீஸ வீண்செலவுன்னு சொல்றாங்களா? எனக்கு தெரியாதுடா! சத்தியமா
மரியம் இதெல்லாம் எங்கிட்ட சொல்லவேயில்லடா!" என்று மெல்லிய குரலில் சற்றே வருந்தி சொன்னவனிடம்,
"ம்க்கூம்.....! ஒவ்வொன்னையும் அவ சொன்னா தான் ஒனக்குப் புரியுமாடா உனக்கு? ஏன்டா இப்டி இருக்க?" என்று இதமான குரலில் நண்பனைக் கடிந்தான் ஜெயன்.
"மன்னிச்சுக்கடா மச்சான்! இனிமே அவளோட தேவைக்கும் பணத்த கரெக்டா குடுத்துடுறேன். ஆமா, ரிஸார்ட்ல நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தான வேல பாத்தோம்? நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தெரியாம எப்ப இந்த விஷயத்த எல்லாம் பேசுனீங்க?" என்று ஜெயனிடம் அவசரக்குரலில் கேட்டான் நஸார்.
"ஒரு எடத்த தேய்க்க ஆரம்பிச்சா அதை அரைமணி நேரம் தேய்ச்சுக்கிட்டே இருக்குற மங்குணி நீயி! ஒன்னைய ஒரு எடத்துல நிப்பாட்டி வச்சுட்டுப் போயி ஒரு சினிமா எடுக்குற அளவுக்கே கதை பேசிட்டு வரலாம்!"
"ஒரு புள்ள கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்! அது என்னைய வஞ்சு உட்டுடுச்சுன்னு உன் பொண்டாட்டி கிட்ட சொல்றதுக்கு முன்னால அவளோட பிரச்சனய நான் காது குடுத்து கேட்டேன்!" என்று நண்பனிடம் புன்னகைத்தபடி சொன்னான் ஜெயன்.
"எ.......தே? கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டியா?
அந்தப் பொண்ணுட்ட தான?
டேய்..... நீயா ஒரு பொண்ணுட்ட
அப்டி கேட்ட? நிஜமாவே கேட்டியாடா? எங்கிட்ட சொன்ன மாதிரி அந்த பொண்ணுட்டயும் இதையேவா அப்டியே கேட்டுட்ட?" என்று வியந்தபடி தன்னுடைய நண்பனை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டிருந்தான் நஸார்.
நண்பன் சொன்ன புதிய விஷயத்தில் தன்னுடைய முடிந்த பணப்பிரச்சனை அவனுக்கு இரண்டாம் பட்சமாக தோன்றி விட்டது.
"டேய்.... கேட்டுட்டியா கேட்டுட்டியான்னு எத்தன தடவ விதவிதமா எங்கிட்ட கேட்டுட்டு இருப்ப.......? ஆமா; நான் அவ கிட்ட கேட்டுட்டேன்! ஒரு பொண்ணுட்ட என்னைய கல்யாணம் பண்ணிக்குறியாமான்னு
கேக்குறது ஒண்ணும் தப்பான கேள்வி இல்லல்ல......?"
"நான் கேட்ட கேள்வியில அவ கடுப்பாகி எங்கிட்ட இந்த மாதிரி பேசாதீங்கன்னு தான் சொன்னா... ஆனா நான் அவள அவ்ளோ சீக்கிரத்துல விடுறதா இல்ல; இதுல நீ என்ன நினைக்குற?" என்று நண்பனது அபிப்ராயம்
கேட்க நஸார் ஜெயனைப் பார்த்து புன்னகைத்தான்.
"ரொம்ப சந்தோஷமா இருக்குடா மாப்ள! இத்தன வருஷத்துல உனக்கும் ஒரு பொண்ண பிடிச்சுப் போயி அவ கிட்ட கல்யாணம் பண்ணிக்குவோமான்னு வேற கேட்டுட்டு வந்துருக்க? ஆமா.... அந்தப் பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எப்டி முடிவுக்கு வந்த? என்னையும் மரியத்தையும் மாதிரி சின்னப்புள்ளையில இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா பழகியிருந்தா கூட பரவாயில்ல.... உனக்கு இந்தப்புள்ளைய யாருன்னே தெரியாதேடா? எப்டி திடீர்னு கல்யாணம் வரைக்கும் யோசிச்ச?" என்று கேட்டான்.
"வாழ்க்கையில மொததடவையா எங்க ரெண்டு பேருக்கும் இப்டி அடிபட்டதுல ரொம்ப கடுப்பா இருந்ததுடா நஸாரு! நீயி, நம்ம ப்ரெண்ட்ஸூங்க எல்லாரும் வந்து எங்கள பாத்துட்டு போனாலும், இதுல உங்க தப்பு எதுவுமேயில்ல; மன்னிச்சுடுங்கன்னு யாராவது ஒருத்தர் வந்து சொல்ல மாட்டாங்களான்னு நினைச்சு நான் ஒருத்தர மட்டும் ரொம்ப எதிர்பாத்துட்டே இருந்தேன். அது அடிபட்ட உன் காருக்காகவும் சேத்து தான்னாலும் யாரையோ எம்மனசு எதிர்பாத்துட்டே இருந்தது! அப்ப தான் வந்தா அவ.....!"
"எவ்ளோ பெரிய இழப்புலயும் நம்மள தேடி வந்துருக்காங்குற ஒரு புது விதமான உணர்வு.... அது தான் காதலா? தெரியல. பொதுவா இந்த காதல்ங்குற உணர்வு திடீர்னு தானடா வரும்னு சொல்றாய்ங்க; அதேமாதிரி தான் அந்தப்புள்ள ஹாஸ்பிட்டல் முன்னால நின்னு எங்கிட்ட அதோட கஷ்டத்த சொன்னப்ப எனக்கு அவளோட வாழணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு! வெளிய எங்க போறதுன்னாலும் அப்ப
உன் பொண்ணு மரியம் கையப் புடிச்சுட்டே சுத்துவா பாத்தியா? அந்த மாதிரியே அம்மாவ அண்டிக்கிட்டே வளந்துருக்குடா இந்தப்புள்ள...... அவங்க திடீர்னு போகவும் இதால சமாளிக்கவே முடியல!"
"இருக்குற கஷ்டமெல்லாம் போதாதுன்னு இவள கட்டிக்கிடணும்னு வந்தானே
அந்தப்பயலோட தங்கச்சியும், இந்தப்புள்ளையோட தம்பியும் தங்கச்சியும் வேற போன்ல கூப்டப்ப ரெண்டு பேரையும்
கொன்னுட்டு நீ மட்டும் உசுரோடவா இருக்கன்னு கேட்டுருக்குதுக! அவளோட அப்பனப் பத்தி சொல்லவே வேண்டாம்; மொத பொண்டாட்டிக்கு புள்ள இல்லன்னு பர்வதவர்த்தினியோட அம்மாவ கல்யாணம் பண்ணியிருக்கான்! அவங்களோட வாழ்ந்த கொஞ்ச வருஷத்துல அவனோட மொத பொண்டாட்டிக்கும் கொழந்த பொறந்துருச்சு போலருக்கு!"
"அதுக்குள்ள இவளோட அம்மாவும் நாங்க தனியா போய் இருந்துக்குறோம்னு சொல்லிட்டு, இவள கையில புடிச்சிக்கிட்டு வெளிய வந்துட்டாங்க! அதுனால அப்பா, தம்பி, தங்கச்சி, கல்யாணம் பண்ணிக்க இருந்த பையனோட குடும்பம் இப்டி எல்லாம் இருந்தும் ஒரே ஒரு உறவு கூட அவளுக்கு தொணையா நிக்குறதுக்கு தயாரா இல்ல..... அதப்பத்தி அவ பெரிசா கவலையும் படல.... ஆனா அதுக்கெல்லாம் சேத்து வச்சு
போன ரெண்டு பேரையும் நெனச்சி ரொம்ப அழுவுறாடா! அது தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு!" என்று தன் நண்பனிடம் தன்னுடைய மனதில் இருக்கும் விஷயங்களில் சிலவற்றை மனம் வருந்திய குரலில் சொன்னான் ஜெயன்.
அழகி வருவாள்!