அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது.
காணும் முகங்களிலெல்லாம் சந்தோசம்... சந்தோசம்... இதை தவிர வேறொன்றும் இல்லை.
வானதியும் தன் வயதை ஒத்த உறவுத் தோழிகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள்.
வானதியின் பெரியம்மா பெண் நித்யாவுக்கு தான் மறுநாள் திருமணம்.
வீட்டின் முதல் திருமணம் என்பதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர்.
நித்யாவின் தங்கை வித்யா, சின்னப் பெரியம்மாவின் பெண் கவிதா, சித்தியின் பெண்கள் கீதா, இளமதி மேலும் மாமா பெண்கள் அருணா, திவ்யா என்று வானதியின் வயதையொத்த உறவுப் பெண்களின் பட்டியல் நீண்டுச் சென்றது.
பள்ளி பருவத்திற்குப் பின் கல்லூரி நாட்களில் அனைவரும் அவரவர் படிப்புகளில் மூழ்கி விட்டதால்... பழையபடி அவர்களால் ஓரிடத்தில் ஒன்றாக கூடிக் களிக்க முடியவில்லை.
அதனால் மீண்டும் வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஓரிடத்தில் கூடியதும், அவர்களின் மகிழ்ச்சி எல்லையை கடந்தது.
இளமைக்கே உரிய வேகம் வேறு!
போகின்ற... வருகின்ற கண்ணில் படும் இளைஞர்களுக்கெல்லாம் மதிப்பெண்கள் போட்டு தங்களுக்குள் கேலி செய்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு மற்ற ஆண்களைப் பற்றி வர்ணனனைச் செய்து மகிழ்ந்திருந்தப் பொழுது... வானதி தன் மாமாப் பெண் அருணாவிடம்,
"ஏய்! அந்த நீலச் சட்டை ஆள் அழகாக இருக்கிறான் இல்லை... அவனுக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன்!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே...
மெல்லிசைக் கச்சேரியில் ஒரு பாடல் முடிந்து... அடுத்த பாடலுக்கான இடைவெளி விழுந்து, அரங்கமே அமைதியானது.
வானதி அருணாவிடம் சொன்னது, நேரடியாக அந்த நீலச் சட்டைக்காரன் காதுகளிலேயே விழுந்து விட... அவன் வேகமாக வானதி இருந்த திசையில் திரும்பினான்.
அவள் அமைதியாக இருந்திருந்தால்... அவனால் அவளை அடையாளம் காண இயலாமல் போயிருக்கும்.
ஆனால் விதி அவர்கள் இருவருக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் பொழுது, யாரால் தப்பிக்க முடியும்...
பாடலின் சத்தம் குறைந்து, தன் குரல் உரக்க வெளிப்பட்டு... அவன் திரும்பிப் பார்க்கவும் அவளுக்கு வியர்த்து விட்டது.
அவன் தன்னையே ஆவலாக குறுகுறுவென்று பார்க்கவும், அவள் திருதிருவென விழித்தாள்.
அவளின் நிலைப் புரிந்து, அவனுக்கு சிரிப்பாக இருந்தது. வேண்டுமென்றே குறும்பாக புருவத்தை உயர்த்தி சைகையில் என்னவென்று வினவினான்.
அவ்வளவு தான் வானதி மிரண்டு விட்டாள். வேகமாக அருணாவின் கைப் பற்றி இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்றாள்.
"ஏய்... ஏன் இப்படி இழுத்துக் கொண்டு ஓடுகிறாய்?" என்று அவளை நிறுத்தி கேள்வி கேட்டாள் அருணா.
அவளைப் பார்த்து விழித்தவள், "ஒரு... ஒரு... பிரச்சனையாகி விட்டது..." என்றாள் தடுமாறியபடி.
"என்ன?" என்று புருவத்தைச் சுருக்கி வினவினாள் அருணா.
"வந்து... நான் ஒருத்தரைப் பற்றி உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லை... அதை அவர் கவனித்து விட்டார்!" என்றாள் பதற்றத்தோடு கண்களை அகற்றி.
அவளின் கண்ணழகையும், பாவனையையும் ரசித்த அருணா, "சரி விடு... இதெல்லாம் கல்யாண வீட்டில் வழக்கமாக நடக்கறது தான். நீ பயப்படாதே... வா போகலாம்!" என்று அவளை அழைத்துச் சென்றாள்.
ஆனால் அவள் எங்கு சென்றாலும், அவன் பிறர் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்தான்.
வானதிக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. யாரிடமும் அதைப் பகிர முடியாமல் அவள் தவித்தாள்.
அவளின் தவிப்பை, அவன் வெகுவாக ரசித்தான்.
"ஏய் அகில்... உன்னை எங்கெல்லாம் தேடுவது? நீ இங்கே என்ன செய்கிறாய்? வா... உன்னை அத்தை அழைக்கிறார்கள்!" என்று அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான் அவன் நண்பன்.
'ஓ! அவன் பெயர் அகிலா... ஆளைப் போலவே பெயரும் நன்றாகத் தான் உள்ளது!' என்று எண்ணமிட்டபடி நிமிர்ந்தவளின் பார்வை, அவனை மீண்டும் கண்டதும் தடுமாறியது.
'ஐயோ... போன வேகத்தில் திரும்பி வந்து விட்டானா... எமகாதகன்!' என்று மனதினுள் அவனுக்கு செல்லப் பெயர் சூட்டினாள் வானதி.
மற்றவர்களுடன் இணைந்து சாதாரணமாக இருப்பதுப் போல் காட்டிக் கொண்டாலும்... உண்மையில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
உணவு கூடத்திலிருந்து வெளி வந்து கை கழுவி கொண்டிருக்கும் பொழுது, அவளுக்கு அலைப் பேசியில் அழைப்பு வந்தது.
தன் தோழிகளிடம், பேசி விட்டு வருவதாக சைகை காண்பித்து விட்டு தனியிடம் தேடிச் சென்றாள் வானதி.
பேசி முடித்த பின், புன்னகையுடன் அலைப்பேசியை அணைத்து விட்டு திரும்பியவள்... திடுக்கிட்டாள்.
எதிரே சுவரில் ஒற்றை காலை ஊன்றியபடி, மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு... அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அகில்.
அவனைத் தனிமையில் கண்டதும், அவளுக்கு வியர்த்து விட்டது.
சட்டென்று விழிகளை தாழ்த்திக் கொண்டவள், வேகமாக அவனை கடந்துச் செல்ல முயன்றாள்.
"ஒரு நிமிடம்!" என்று அவளை மேலே செல்ல விடாமல் குறுக்கே கை நீட்டி தடுத்தான் அகில்.
அவள் தன் புடவை முந்தானையை இறுகப் பற்றியபடி நெஞ்சம் தடதடக்க தலைக்குனிந்து நின்றாள்.
அவளையே சற்று நேரம் அமைதியாகப் பார்த்தவன்,
"உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என்னை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா?" என்று தன் விருப்பத்தை சொல்லி நேரடியாக அவளின் சம்மதம் கேட்டான் அவன்.
அவளுக்குப் பதட்டத்தில் தொண்டையை அடைத்தது.
சற்று செருமி அதை சரி செய்தவள், "நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் சும்மா விளையாட்டாக தான் தோழிகளோடு சேர்ந்து அவ்வாறு சொல்லி விட்டேன். மற்றபடி..." என்று அவள் விளக்கி கொண்டிருக்கையிலேயே இடைமறித்தவன்,
"அது எனக்கும் தெரியும்... நான் உன் சம்மதத்தை தான் கேட்டேன்!" என்றான்.
"இல்லை... என் அப்பா, அம்மா என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் மனம் நோகும்படி நான் எதுவும் செய்ய மாட்டேன்!" என்றாள் வேகமாக.
"அம்மா புண்ணியவதி... நான் ஒன்றும் உன்னை காதலிக்கச் சொல்லவில்லை, திருமணம் செய்ய தான் கேட்கின்றேன். அதுவும் முறைப்படி உன் பெற்றோரிடம் வந்து, உன்னைப் பெண் கேட்பார்கள் என் பெற்றோர்!" என்றான் நீண்ட விளக்கமாக.
அவனை ஆச்சரியத்தோடு ஏறிட்டவள், "அப்படியென்றால்... நீங்கள்...?" என்று இழுக்கவும்,
அவன் வசீகரிக்கும் புன்னகையுடன், "நான் மாப்பிள்ளையின் சித்தி பையன் பெயர் அகிலன்!" என்றான்.
அவன் சொன்ன விவரங்களை அவள் வேக வேகமாக மூளையில் பதிவேற்றம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் மீண்டும் குறுக்கிட்டான்.
"ம்... இப்பொழுது சொல்லு!" என்றான் அகில் விடாக்கண்டனாக.
"என்ன சொல்ல வேண்டும்?" என்று அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் வானதி.
"அடிப்பாவி... உன் சம்மதம் கேட்டேனே... அதற்குள் மறந்து விட்டதா?" என்றான் சிறு ஊடலுடன்.
வானதியின் கன்னம் சிவந்தது, "அதை அப்பாவிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்!" என்று வேகமாக மொழிந்து விட்டு அவ்விடத்தை விட்டு ஓட முயன்றாள்.
அவளின் கரம் பற்றி அவளைத் தடுத்து நிறுத்தியவன், "எனக்கு உன் நேரடியான பதில் இப்பொழுதே வேண்டும்!" என்று அவள் கண்களை நேருக்கு நேர் நோக்கினான்.
முகம் சிவந்தவள், "சரி!" என்றாள் வெட்கத்துடன்.
அகிலனின் முகம் மத்தாப்பூவாய் மலர்ந்தது.
**END**