பாகம் 25
தூக்கத்திலிருந்து கண் விழித்த அர்ஜுன், இந்து அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பதை கண்டு எழுந்து அமர்ந்தான்.
"இனிய காலை வணக்கம்" என்றாள் இந்து.
ஒவ்வொரு நாளும் இப்படித் தான் துவங்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அவன் அமைதியாய் இருக்கவே,
"குட் மார்னிங் சொன்னேன்..."
"காலை வணக்கம்னா, குட்மார்னிங்னு எனக்கு தெரியும்" என்றான்.
"தெரியுமா...? லண்டன்ல வளர்ந்தவராச்சே... தெரியாதோன்னு நினைச்சேன்" என்று சிரித்தாள்.
கட்டிலை விட்டு கீழே இறங்கி, குளியலறை நோக்கி விரைந்தான். அலுவலகம் செல்ல தயாரான நிலையில், கீழ்தளம் வந்தான். அன்று இந்து சமைக்கவில்லை. அமைதியாய் அவன் அருகில் நின்றிருந்த வேலனை, நிமிர்ந்து பார்த்தான்.
"ஏன் இன்று இந்து சமைக்கவில்லை?" என்ற கேள்வி அவன் தொண்டையை அரித்தது.
எதுவும் கேட்காமல, விருப்பம் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்... திருத்தம்... பாதியில் விட்டு விட்டு எழுந்தான்.
அப்பொழுது, பூஜையை முடித்துக் கொண்டு வந்தாள் இந்து. அவளைப் பார்த்து நின்றான் அர்ஜுன்.
"இங்க பாரு..." என்றான்.
தனக்குப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள் இந்து. அவன் வேறு யாரிடமோ பேசுகிறான் என்பதை போல.
"நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்"
ஓடி வந்து அவன் அருகில் நின்றாள் ஆர்வமாக.
"இன்னைக்கு மத்தியானம் எனக்கு சாப்பாடு கொண்டு வராத."
"ஏன்?" என்று அவள் கேட்க முற்படும் முன்,
"நான் ஆஃபீஸ்ல இருக்கமாட்டேன்" என்றான்.
"ஏன்? எங்க போறீங்க?"
"நான் ஏன் உனக்கு பதில் சொல்லணும்?" என்றான் தெனாவட்டாக.
அங்கிருந்து அவன் செல்ல ஓரடி எடுத்த போது, அவனை இறுக்கமாய் கட்டிப்பிடித்துக் கொண்டாள் இந்து.