அஷோக் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஷக்தியின் காதில் எதிரொலித்துக் கொண்டு இருந்ததது. அவனால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை, நேராகப் பார்த்து வண்டியைக் கூட ஓட்ட முடியவில்லை. மனது எதெதையோ கற்பனை செய்து அவன் நிம்மதியை இல்லாமல் செய்து கொண்டிருக்க கைகள் ஏதோ தோராயமாக வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தன.
"ஒரு பொண்ணு கழுத்துல அவ விருப்பம் இல்லாம தாலி கட்றவன்லாம் ஒரு ஆம்பளையா??? அந்த பொண்ணு கடைசி வரை விதியேனு தான் அவன் கூட வாழ்வாலே தவிர ஒரு நாள்.. ஒரு நாள்.. கூட அவன் கூட மனசார வாழ மாட்டா......." இதைத் தான் அஷோக் கேட்டான். ஆனால் அவன் சத்தியமாக ஷக்தியைப் பற்றி அந்த நொடி யோசிக்கவில்லை. அவன் அபிக்கு ஆருதல் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆனால் ஷக்தியின் குற்றமுள்ள நெஞ்சில் அந்த வார்த்தைகள் கத்தியாய் இறங்கியது.
சஞ்சனா கழுத்தில் அவள் விருப்பம் இன்றி தாலி கட்டியது, அவளுக்கு ஒரு முறையான அங்கிகாரம் வழங்காமல் அவளைக் கடத்திக் கொண்டு வந்து வைத்திருப்பது போல ஆபீசுக்குள் அடைத்து வைத்து இருப்பது என்று நினைக்க நினைக்க ஷக்திக்கு அவன் மேலேயே வெறுப்பாய் இருந்தது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு அதை மறக்கவென்று வழி தேடி வந்த பெண்ணை அவளது அபலைத்தனத்தை அவன் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான். சுந்தரம் மாமாவும் அத்தையும் அவளை என்னவெல்லாம் பேசினார்கள் எல்லாம் அவனாள் தான். ஊருக்கே தெரிந்த பின்னர் ஊரே கைகொட்டி சிரித்ததன் பின்னர் அவளும் அவனை விட்டு வேறு எங்கு செல்லுவாள்? விதியே என்று அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்குகிறாள். அவன் கட்டிலுக்கு அழைத்தாள் அவள் அதற்கும் இணங்குவாள் ஆனால் ஒரு நாள்.. ஒரே நாளேனும் அவனோடு கூட முழுமனதாக குடும்பம் நடத்த மாட்டாள்.
"என்னடா ஷக்தி இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை உனக்கு! நீ நீதி, நேர்மை, உண்மை என்று 28 வருடங்களாக ஒரு உத்தம வாழ்க்கை வாழ்ந்து வந்தது கடைசியில் இப்படி ஒரு பெண்ணின் சாபத்துக்கு ஆளாவதற்கா?" அவன் மனசாட்சி வேறு விதவிதமாய் கேள்வி கேட்டு அவனைக் கொன்றது. அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியாது என்று தோன்ற வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டு போய் ஒரு Bar இன் முன்பு நிறுத்தினான் அவன். ஷக்திக்கு இதற்கு முன் குடித்து பழக்கம் இல்லை. எத்தனையோ முறை அஷோக் கூட வற்புறுத்தியும் ஷக்தி மதுபானம் வாயில் வைத்ததில்லை. அவன் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தன் மனசாட்சிக்கு உண்மையாய் வாழ்பவன். ஆனால் இன்று அவன் தன்னை ஒரு புழு பூச்சியைப் போல உணர்ந்தான். தன் மனதுக்கும் உடலுக்குமே கட்டுப்பாடு இல்லாத போது வாய்க்கும் வயிற்றுக்கும் எதற்கு கட்டுப்பாடு என்று நினைத்தவன் உள்ளே சென்று அமர்ந்து ஒரு பாட்டில் vodka ஆர்டர் செய்தான். பாட்டில் கைக்கு வந்ததும் அதை கண்ணாடிக் குவளைக்குள் சரித்து பின்பு அதை வேகவேகமாக தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். மதுவுக்கு பழக்கம் இல்லாதவன் ஆகையால் அந்த அமிலத்திரவம் அவன் தொண்டையை ஏரித்துக் கொண்டு உள்ளே இறங்கியது. வானம் கறுக்கும் வரை அந்த வாட்காவோடு சண்டை செய்து கொண்டு இருந்தான் ஷக்தி.
நேற்று போல இன்றைக்கும் நடு ராத்திரியில் தான் வீடு வந்து சேர்வானோ என்று சஞ்சனாவுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. அவனது கையடக்கத் தொலைபேசிக்கு அழத்தால் அதுவும் செயலற்றுப் போய் இருந்தது. நேற்றக்காவது 10 முறைக்கு மேல் கால் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருந்தான். இன்று இரவு 10 மணியாகி விட்டது ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு இல்லை. அபியை தேடிப் போவதாக சொல்லி விட்டு தான் சென்றான். வந்து விடுவான். சஞ்சனா தனக்குத் தானே ஆருதல் கூறிக் கொண்டாள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்க ஓடிப் போய் திறந்தாள் சஞ்சனா. ஷக்தி வாசலில் நான்கு காலில் நின்று கொண்டிருந்தான். சஞ்சனா அவன் நின்றிருந்த கோலம் கண்டு வாயில் கையை வைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டாள்.
"என்னை சஞ்சனா மாமாவை பார்த்ததுமே மூக்கை மூடிக்கிட்ட? இப்போ தானே மாமா எண்ட்டர் ஆகுறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு இன்னும் நிறைய இருக்கு.. என்று சொல்லியவாறு தள்ளாடி உள்ளே வந்து சோபாவில் விழுந்தான். சஞ்சனாவுக்கு புரிந்து விட்டது ஏதோ விபரீதம் நடக்கப் போகின்றது என்று.
"சஞ்சனா இப்படி வா" என்று அவளை அழைத்தான். இந்த நிலமையில் இருப்பவனோடு பேச்சுவார்த்தைக்கு செல்வது இருவருக்கும் நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டவள் கொஞ்சம் கூட நகராமல் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
"சஞ்சனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டி. வா இங்க." உடைந்து போன குரலில் மறுபடியும் அழைத்தான். அவள் வருவதாக இல்லை.
"சஞ்சனா நான் உன்கூட நல்லபடியா பேசிமுடிக்க பார்க்கிறேன் என்னை கோவக்காரன் ஆக்கிப் பார்க்காத இப்படி வா...." இம்முறை குரலில் கொஞ்சம் கோபம் ஏறி இருந்தது. அதற்கும் அவள் அசருவதாகத் தெரியவில்லை.
"வரமாட்டல்ல? நான் கூப்பிட்டா வரமாட்டல்ல? புடிக்கலைனா அதை மூஞ்சி மேல நேரா சொல்லி தொலைச்சிட்டு போய்ட்டே இருங்களேண்டி. ஏண்டி இப்படி கூடவே இருந்து நீங்களும் செத்து எங்களையும் சாவடிக்கிறிங்க?" கோபமும் கண்ணீருமாக அவளை நோக்கி காட்டுக் கத்தல் கத்தினான் அவன்.